சூடான வடை
மைசூர் – பெங்களூர் வழித்தடத்தின் நடுவில் அமைந்துள்ளது, மட்டூர் என்னும் நகரம். இந்த நகரத்தில் “ மத்தூர் வடை” பிரபலம். நன்றாக மொறுமொறுவென்று நம்மூர் மசால் வடை போன்று இருக்கும். இந்த மத்தூர் வடைக்கு சைடிஷ்ஷாக கொத்தமல்லி சட்னி வழங்குகிறார்கள். ஆக, வடை இருக்கும் இடத்தில், அனுமன் இல்லாமலா!இந்த மத்தூரில் ஹோலே அனுமனும் வடையும் மிகவும் பிரபலம். வடையை பற்றி பார்த்தோம். அடுத்து ஹோலே அனுமனை பற்றி பார்ப்போம். அதற்கு முன்பாக, மத்தூர் என்னும் இந்த பிரபலமான ஊரைப் பற்றி பாப்போம்.
அழகிய நதியின் ஓரத்தில்
மத்தூர் நகரம் ஓர் அழகிய அமைதியான இடம். ராஜாக்கள் கட்டிய பல பழங்கால கோயில்கள், மட்டூரில் இருக்கின்றன. மேலும், இந்த நகரம் ஷிம்ஷா (Shimsha) என்னும் நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், மட்டூர் மிகவும் முக்கிய இடமாக பார்க்கப்பட்டது. ஆனால், திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களும் செய்த போரின் போது ஏற்பட்ட அழிவுகளுக்குப் பிறகு மத்தூர் இடம், சற்று தன் புகழை இழந்தது. ஆனால், தற்போது மத்தூரில் அனுமன் கோயில் கொண்டிருப்பதால் மீண்டும் புகழ் தழைத்தோங்க செய்திருக்கிறது.
ஆயுதங்களை பதுக்கல்
அதே போல், ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால், சுல்தானின் படைகளும், ஆங்கிலேயர்களும் மத்தூர் நகரத்தில்தான் பெருவாரியாக தங்கியிருந்து தங்களின் ஆயுதங்கள், துப்பாக்கிகள், போருக்குப் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் என அனைத்தும் இங்குதான் தயாரிக்கப்பட்டு, சேமிக்கப்பட்டன.மத்தூர் என்னும் பெயர் பெற்றதற்கு இருவெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, கன்னடத்தில் “மடு’’ என்றால் துப்பாக்கி போன்ற சக்தி வாய்ந்த பொருட்களை குறிக்கும் சொல். நாம் முன்பே சொன்னது போல், மத்தூரில் சக்தி வாய்ந்த பொருட்களை பதுக்கியதால் இந்த பெயர் வந்திருக்கலாம். இன்னொன்று, இந்த மத்தூர் இடத்திலேயே ‘மதுரம்மா’ என்னும் காவல் தெய்வம் கோயில் கொண்டுள்ளதால், மத்தூர் என்கின்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
பழமையான மத்தூர்
மகாபாரத காலத்திலிருந்தே மத்தூர் நீண்ட, வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மேலும், அர்ஜுனன் இந்த இடத்திற்கு யாத்திரை மேற்கொண்டதால், இந்த இடம் “அர்ஜுனபுரி” என்றும் அழைக்கப்பட்டது. அப்போது, ஷிம்ஷா நதி கரையில் வசித்த ஒரு ரிஷியின் பெயரால், “கடம்ப நதி” என்றும் ஷிம்ஷா நதியை அழைக்கப்பட்டது.பிற்காலத்தில், ஹொய்சாள வம்சத்தைச் சேர்ந்த விஷ்ணுவர்தனன் என்னும் மன்னன், ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்களுக்கு, மத்தூர் இடத்தை தானமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும், மன்னன் விஷ்ணுவர்தனன் மத்தூரில் வசித்த மக்களையும், மத்தூரில் உள்ள வரதராஜர் கோயிலையும் கட்டிக் காத்ததாக கூறப்படுகிறது. அதே போல், இன்றளவும் இங்குள்ள அக்ரஹாரத்திற்கு அவரது மகனின் பெயரால் நரசிம்ம – சதுர்வேதி – மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
மகான்கள் பிரதிஷ்டை
மத்தூரில் அனுமன் கோயிலைத்தவிர, ஸ்ரீ உக்ர நரசிம்மர் கோயில், ஸ்ரீ வரதராஜர் கோயில், ஸ்ரீ ராமர் கோயில் என மூன்று அழகிய திருக்கோயில்கள் நம் கண்களுக்கு
விருந்தளிக்கின்றன.இதுவரை மகான் ஸ்ரீ வியாசராஜர் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட அனுமனை தரிசித்து வந்தோம். ஆனால், மகான் ஸ்ரீ ஸ்ரீபாதராஜரும், அவரின் சீடர் ஸ்ரீ வியாசராஜரோடு இணைந்து இக்கோயில் ஹோலே அனுமனை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. ஆம்! ஒரு முறை குருவான ஸ்ரீபாதராஜரும், சீடரான ஸ்ரீ வியாசராஜரும் சேர்ந்து இந்த மட்டூர் இடத்திற்கு தேச சஞ்சாரத்தை மேற்கொள்கிறார்கள்.
அப்போது, இவ்விடத்தின் மகிமைகளை தெரிந்துக் கொண்ட இருவரும், மத்தூரில் அனுமானை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, அவர்கள் ஷிம்ஷா நதிக்கரையில் அனுமனை இருவரும் இணைந்து பிரதிஷ்டை செய்தனர். மேலும், இவ்விருவரும் சேர்ந்து பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள், மிகவும் சிறப்பான நாளாக இருந்திருக்கிறது என்று வரலாறு கூறுகிறது. தற்போது இத்திருக்கோயிலில், ஸ்ரீ வெங்கடாஜலபதி சந்நதியும், ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமியின் மிருத்திகை பிருந்தாவனமும் உள்ளது.
ஹோலே அனுமன் பெயர் காரணம்
காலப் போக்கில், அந்தந்த மன்னர்கள் ஆட்சி புரியும்போதும், இந்த அனுமன் கோயிலை புதுப்பித்திருக்கிறார்கள். இந்த அனுமனின் கர்ப்பகிரகம் பெரியது. கர்ப்பகிரகத்திற்கு முன்னால் ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கிருந்தே பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். எந்த ஆடம்பரமும் இல்லாத எளிமையான கோயில் இது. இதனால் பக்தர்கள் மன அமைதியுடன் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்ய முடியும்.மேலும், இந்தக் கோயில், ஆற்றின் கரையில் இருப்பதால், இந்தக் கோயிலை “ஹோலே ஆஞ்சநேயர் கோயில்” என்று அழைக்கப்படுகிறது. ஹோலே என்றால் கன்னடத்தில் நதி என்று பொருள்.
அழகிய தோற்றம்
இங்குள்ள ஹோலே அனுமன், கௌபீனம் (கோவணம்) அணிந்திருப்பதைக் காணலாம். ஆகையால், அனுமனின் இரு வலிமைமிக்க தொடைகளையும் காணலாம். இதன் பொருள், அனுமனின் வல்லமையைக் காட்டுகின்றது. அவரது மார்பில் மூன்று வரிசைகளால் ஆன அழகான மணிகளால் செய்யப்பட்ட மாலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.ஹோலே அனுமனின் தோளுக்கு மேல் அவரது ‘உத்தரியம்’ அதாவது அங்கவஸ்திரம் சாற்றப்பட்டதை காணலாம். மேலும், அனுமனின் இடது தோளிலிருந்து யக்ஞோபவீதம் (பூணுல்) காணப் படுகிறது. அனுமனின் இரண்டு மணிக்கட்டு களில் கங்கணமும், மேல் கையில் ஒரு கேயூரம் அணிந்துள்ளார். அவரது இடது கையில் சௌகந்திகா மலரைப் பிடித்திருக்கும் அழகான காட்சி. அனுமனின் வலது கையில் ‘அபய முத்திரை’யைக் காட்டி பக்தர்களை ஆசீர்வதிக்கிறார்.
அவதாரத்ரய அனுமன்
ஹோலே அனுமனின் கேசம் ஒரு கொத்தாக அழகாகக் கட்டப்பட்டுள்ளது. அனுமனின் உடலில் சந்திரன் மற்றும் சூரியனின் சின்னங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள இறைவன் ஒரு அவதாரத்ரய அனுமன் ஆவார். அவதாரத்ரய அனுமன் என்பது, அனுமன், பீமன் மற்றும் மத்வா ஆகிய மூன்று அவதாரங்களையும் ஒரே வடிவத்தில் சித்தரிக்கும் ஒரு தனித்துவமான சிலை வடிவமாகும்.அதுமட்டுமா..ஹோலே அனுமனின் வாலின் முனையில் உள்ள மணி, ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. அதே போல், சூரியன் – சந்திரனின் காட்சி, ஸ்ரீ ஸ்ரீபாதராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் குறிக்கிறது. ஆக, இதனை வைத்து இரு மகான்களும் பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்பதனை உறுதி ஆகிறது.நிறைய பிரச்னைகளுடனும், கனத்த மனதுடனும் வரும் பக்தர்கள், ஹோலே அனுமனின் வளாகத்திற்குள் நுழைந்தவுடன், இங்குள்ள இனிமையான சூழ்நிலை உங்களை அமைதிப்படுத்தும். உங்கள் மனம் நிம்மதியடைவதையும், எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையைப் பெறுவதையும் நீங்கள் நிச்சயமாக உணர்வீர்கள்.
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4:30 முதல் 7:30 மணிவரை. தொடர்புக்கு: 9916600184.
எப்படி செல்வது: மைசூரில் இருந்து 63 கி.மீ தூரத்திலும், பெங்களூரில் இருந்து 86 கி.மீ தூரத்திலும் மத்தூர் நகரத்தை அடைந்துவிடலாம். அங்கிருந்து ஒரே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஹோலே அனுமனின் கோயிலை அடைந்துவிடலாம்.
The post இரு மகான்கள் பிரதிஷ்டை செய்த ஹோலே அனுமன் appeared first on Dinakaran.