
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவரது நடிப்பில் கடந்த மார்ச் மாதம் சிக்கந்தர் படம் வெளியானது. இந்த படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சல்மான்கான் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலை மையமாக கொண்டு உருவாக உள்ளது. இந்த படத்தை அபூர்வா லக்கியா இயக்குகிறார்.
கல்வான் பள்ளத்தாக்கு போரில் ஈடுபட்ட வீரர் கர்னல் பிகுமல்லா சந்தோஷ் பாபு கேரக்டரில் சல்மான்கான் நடிக்கிறார். இந்த கேரக்டருக்காக சல்மான் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சவாலான கதாபாத்திரத்திற்காக சல்மான்கான் உடல் ரீதியாக மட்டுமல்ல தேசத்தின் மரபை போற்றும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை எடுத்து வருகிறார். போரில் வீர மரணம் அடைந்த கர்னல் பிகுமல்லா சந்தோஷ் பாபு மகாவீர் சக்ரா விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.