
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக 5 போட்டிகளிலும் விளையாட முடியாத நிலையில் உள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். எனவே சுப்மன் கில் வருங்காலத்தில் அசத்துவார் என்ற நம்பிக்கையுடன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
மேலும் அந்த அணியில் சமீப காலமாக தொடர்ச்சியான பார்மில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடமளிக்காதது பலரது மத்தியில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரால் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது? என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார். நல்ல பார்மில் இருக்கும் அவரை தேர்ந்தெடுத்திருந்தால் இங்கிலாந்துக்கு பயத்தை கொடுத்திருக்கலாம் என்றும் சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சிக்கு உரிய பாராட்டுகள் கிடைப்பதில்லை. ரிஷப் பண்ட் ஐ.பி.எல். தொடரில் தடுமாறியதாலேயே இந்தியாவின் கேப்டன்ஷிப் பதவியை பெறவில்லை என்று மனோஜ் திவாரி சொன்னார். அப்படி பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஐ.பி.எல். அற்புதமாக அமைந்துள்ளது. அவர் கேப்டனும் கூட.
அப்படி இருக்கும்போது அவரால் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது?. அவர் நிச்சயமாக மூன்று வடிவங்களிலும் விளையாட முடியும். ஒருவர் நல்ல பார்மில் இருக்கும்போது அவரை வெளிநாட்டு தொடருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் பார்ம் காரணமாக அவர் சிறப்பாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
டெஸ்ட் அணியில் அவரைப் பார்க்க விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் இதே அணுகுமுறையை கடைப்பிடித்தால், அது அணிக்கு நன்மை அளிக்கும். உங்களிடம் அவரைப்போல் 2-3 வீரர்கள் இருந்தால் அது எதிரணிக்கு பயத்தை அளிக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ஓவருக்கு 6-7 ரன்ரேட்டில் விளையாடுகிறது. இந்திய அணி ஓவருக்கு 4-5 ரன்ரேட்டில் விளையாடினாலே இங்கிலாந்தை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும்" என்று கூறினார்.