ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு “ஈட் ரைட் கேம்பஸ்” சான்றிதழ்: தினமும் 2,500 உள் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கல்

2 hours ago 1

சென்னை: நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஈட் ரைட் கேம்பஸ் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக இந்த சான்றிதழை பெறும் பெருமையை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை பெற்றுள்ளது. சென்னை சென்ரலில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தினமும் சுமார் 12 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.

உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு 3,500 படுக்கை வசதியும் உள்ளது. இங்குள்ள சிகிச்சை வசதி மற்றும் சிகிச்சை முறைகள் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை மட்டுமல்ல நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதிலும் சிறந்த மருத்துவமனை என்ற நற்சான்றிதழை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பெற்றுள்ளது.

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் பணியிடங்களில் வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்யும் உணவுத்துறை அவற்றின் தரம் ஆரோக்கியத்தை கணக்கிட்டு ஈட் ரைட் கேம்பஸ் என்ற சான்றிதழை வழங்கி வருகிறது. அந்த சான்றிதழ் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் முதன் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமும் சுமார் 2000 முதல் 2500 பேருக்கு மருத்துவமனை வளாகத்திலேயே தயார் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து நிபுணர் மேற்பார்வையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு புரதசத்து மிகுந்த உணவு, உப்பில்லா உணவு என 10 வகை உணவு தயாரித்து வழங்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை மட்டுமின்றி தரமான உணவு வழங்குவதிலும் நற்சான்று பெற்றிருக்கும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

The post ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு “ஈட் ரைட் கேம்பஸ்” சான்றிதழ்: தினமும் 2,500 உள் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article