வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் பலி

2 hours ago 2

கூடலூர் : கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு புலிகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் மானந்தவாடியை அடுத்த பஞ்சாரகொல்லி பகுதியில் காபி தோட்ட பெண் தொழிலாளியை கொன்று தின்ற புலி ஒன்று அதற்கு அடுத்த நாளில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று வயநாடு மாவட்டம் பத்தேரி தாலுகா முத்தங்கா சரணாலயத்திற்கு உட்பட்ட குறிச்சியாடு வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் புலிகள் இறந்து அழுகிய நிலையில் கிடந்தது.

ரோந்து பணிக்கு சென்ற போது பார்த்த வன ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ஆய்வு செய்த பின் புலிகளின் உடல் சிதைந்த நிலையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இதேபோல், வைத்திரி தாலுகா கோடார் தனியார் காபி தோட்டத்தில் நேற்று காலை வேலைக்கு சென்ற பெண்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை பார்த்து தோட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அப்பகுதியில் ஆய்வு செய்தபோது பெண் புலி ஒன்று இரண்டு கிடப்பதை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர் புலியின் உடலை மீட்டு அதனை உடற்கூராய்வு செய்தனர்.

புலிகள் இறந்ததற்கான காரணம் மருத்துவ அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ச்சியாக, 2 வாரங்களுக்குள் 4 புலிகள் இறந்த காரணம் அறிய கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன், உதவி வன பாதுகாவலர் தீபா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 4 புலிகள் அடுத்தடுத்து இறந்ததற்கான காரணம் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article