*தாராபுரம் அருகே பரபரப்பு
தாராபுரம் : தாராபுரம் அருகே தெருநாய் கடித்து குதறியதில் பலியான ஆடுகளுடன் விவசாயிகள் மூலனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஊராட்சி ஒன்றியம் பட்டத்தி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோம்பை காட்டு தோட்ட விவசாயி மணிவேல் (45). இவர், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து அதில் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இவரது ஆட்டுப்பட்டிக்குள் கூட்டமாக புகுந்த தெரு நாய்கள், ஆடுகளை விரட்டி விரட்டி கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே 15 ஆடுகள் குடல் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 7 ஆடுகள் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடி வருகின்றன.
சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் இறந்து போன ஆடுகள் மற்றும் காயமடைந்த ஆடுகளுடன் மூலனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, இறந்து போன ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தெரு நாய்களின் தொடர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து இதற்கான தீர்வை தங்களுக்கு கூற வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்தனர். தொடர்ந்து உயிரிழந்த ஆடுகளை தாராபுரம்-கரூர் சாலையில் போட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம் தாசில்தார் திரவியம் நேரில் சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு கூறப்பட்டால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக்கூறி அவரது பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்தனர். இதனிடையே தாராபுரம் டிஎஸ்பி விஜய சாரதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் மூலனூர் காவல் நிலையம் அருகே குவிக்கப்பட்டனர்.
இது குறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி செந்தில் கூறுகையில், ‘‘காங்கயம், தாராபுரம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. பால் உற்பத்திக்காக மாடுகளையும், இறைச்சிக்காக ஆடுகளையும் வளர்த்து விற்பனை செய்து வருகிறோம்.
கடந்த ஒரு வருடமாக கால்நடைகளை தெரு நாய்கள் கடித்து கொன்று விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்காக காங்கயம், தாராபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் முறையான நிவாரணம் வழங்கவில்லை.
தெரு நாய்களை ஒழிக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் இழப்பீட்டுத் தொகையை அறிவிப்பதுடன் போர்க்கால நடவடிக்கையாக தெருநாய்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மட்டுமே விவசாயிகளின் வாழ்க்கையை அழிவுக்கு செல்லாமல் பாதுகாக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
The post தெருநாய் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பலி இறந்த ஆடுகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல் appeared first on Dinakaran.