*50 டெட்டனேட்டர்கள், 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
வேலூர் : வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வேலூரில் பாலமதி மலைப்பாதை, நாய்க்கனேரி மலை, ஓட்டேரி மலைப்பகுதி, தொரப்பாடி, காட்பாடி என்று மலைப்பகுதிகளிலும், மலைபாதைகளிலும் காதல் ஜோடிகள் தனிமையில் இருப்பதை காணமுடியும். அவர்களில் சிலர் எல்லை மீறலிலும் ஈடுபடுகின்றனர். இதனை நோட்டமிட்டு அவர்களை மிரட்டி பணம், நகை பறிக்கும் கும்பல்களின் கைவரிசையும் தொடர்ந்து வருகிறது.
இதில் பாதிக்கப்படுபவர்கள், தங்களுக்கு வேறுவிதமான பிரச்னையை உண்டாக்கலாம் என்று, அதனை மறைத்து விடுகின்றனர். இது வழிப்பறி கும்பலுக்கு வசதியாகி விடுகிறது. ஆனால், அதே கும்பலின் ஆடியோ பேச்சு தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் தீர்த்தகிரி மலையின் அருகில் காதல் ஜோடி ஒன்று தனிமையில் இருப்பதை கண்டு அவர்களை மிரட்டி நகை பறித்துள்ளதாக வழிப்பறி கும்பலை சேர்ந்த ரங்காபுரம் மூலக்கொல்லையை சேர்ந்த ஒருவர் தனது நண்பனுக்கு செல்போனில் கூறுகிறார்.
அதில், என்னை பார்த்து பயந்துட்டான், பணம் ₹15 ஆயிரம் ரெடி பண்ணி கொடுக்குறதாக சொல்கிறான். என் கிட்ட ஏது, போன் பே, ஜிபே அதனால, கை, கழுத்தில் இருந்த நகைகளை பறித்துக்கொண்டதாகவும், மேற்கொண்டு பிரச்னை செய்தால் இதுவேறு விதமாக நமக்கு பிரச்னையாகும் என்பதால் விட்டு விட்டதாகவும் கூறுகிறார்.
வேலூர் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த ஆடியோ பதிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோ பதிவை வைத்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்த அய்யனார்(46), சத்துவாச்சாரி இந்திரா நகரை சேர்ந்த விநாயகம்(60) ஆகியோர் காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அய்யனார் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், 50 டெட்டனேட்டர்கள், 100 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பெருமுகையில் உள்ள தனியார் கல் குவாரிக்காக வீட்டில் பதுக்கி வைத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அய்யனார், விநாயகம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
The post சமூக ஊடகங்களில் கூட்டாளிகளிடம் பேசும் ஆடியோ வைரல் வேலூரில் காதல் ஜோடிகளை மிரட்டி நகை, பணம் பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.