இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் காரணமாக எல்லையோர கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் எல்லை கிராம மக்களுக்கு தங்களது பகுதி போரின் எல்லையாக இருக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்றது. ஏனெனில் பாகிஸ்தானின் ராணுவம் எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது.
மேலும் அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதின்டா, சண்டிகர், பலோடி உத்தரலாய் மற்றும் பூஜ் ஆகிய இடங்களை பாகிஸ்தான் ராணுவம் குறிவைக்க முயன்றதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த நிலையில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் எல்லை கிராமங்களில் அவ்வப்போது சைரன்கள் ஒலிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.
இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். மேலும் மின்வாரிய அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முழுமின்தடையை அமல்படுத்தினார்கள். அமிர்தசரஸ், பதன்கோட், பெரோஸ்பூர் மற்றும் குருதாஸ்பூர் உள்ளிட்ட பஞ்சாபின் பல எல்லை மாவட்டங்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் பதற்றத்துடன் இரவை கழித்தனர். இரவு நேரத்தில் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக பதன்கோட் பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் நேற்று காலை அமைதி நிலவியது.
இதேபோல் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் குஜராத்தில் கட்ச் மற்றும் பனாஸ்கந்தா மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையையும் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு மின்தடைக்கு உட்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி முதல் காலை 5.30 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட்டது.
The post ராஜஸ்தான், பஞ்சாப்பில் ஓயாமல் ஒலித்த சைரன், கட் ஆன கரண்ட் பதற்றத்துடன் இரவை கழித்த மக்கள் appeared first on Dinakaran.