
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நானி தற்போது 'ஹிட் 3' படத்தில் நடித்து வருகிறார். கே.ஜி.எப் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார்.
இப்படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையில், கடந்த 14-ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 21.31 மில்லியன் பார்வைகளை கடந்து ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் பட சாதனையை முறியடித்திருக்கிறது. ஆர்.ஆர்.ஆர் பட டிரெய்லர் 20.45 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.
24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த தெலுங்கு பட டிரெய்லர்களின் பட்டியலில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2: தி ரூல் 44.67 மில்லியன் பார்வைகளை கடந்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த படியாக குண்டூர் காரம் (37.68மி), கேம் சேஞ்சர் (36.24 மி), சலார் (32.58 மி), மற்றும் சர்க்காரு வாரி பாடா (26.77 மி) ஆகியவை உள்ளன.