ராஜகோபுர மனசு

3 hours ago 2

(வல்லாள கோபுரக் கதை)

பகுதி-9

தனது குலகுரு மடத்திலிருந்து, பட்டத்தரசிகளோடும், பரிவாரங்களோடும் கிளம்பி, இடைவிடாது பயணித்து, தலைநகரை நெருங்கும்வரை யாரோடும் பேசாது, விரதம் பூண்டதுபோல மௌனமாக இருந்த மன்னர் வீரவல்லாளன், தூரத்தில் வரும்போதே, நகருக்கு மத்தியில் நீண்டு படுத்திருக்கும் ஈசனாய் தோற்றமளிக்கும் அருணை மலையை கண்டவுடன், வயிறு குழைந்தார். வாய் கோணினார். நாவறண்டு, தொண்டைக் குழியில் ஏதோ சிக்கிய உணர்வோடு, கைகளிரண்டையும் தலைக்குமேல் வைத்து, “சிவமே,என்சிவமே” என மனசுக்குள்ளுருகினார்.

அருணைமலையை நெருங்கநெருங்க, கிட்டத்தட்ட பித்துப்பிடித்த மனநிலைக்கு மாறினார். திடீரென “அப்பா, என் அப்பா” என கதறினார். அடுத்தகணமே “மகனே, என்
மகனே” வாய்விட்டலறினார். மாறிமாறி இரட்டை மனநிலையில் உருகிய மன்னரை அரசிகள் வியப்புடன் நோக்கினர். சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பிய மன்னர், அரசிகளைப் பார்த்து, அழகாகச் சிரித்தார். இளையராணியின் கன்னம் தடவி, “சொக்கி, அரண்மனைக்குப் போகாமல், அருணாசலேஸ்வரர் சந்நதிக்கு போகச் சொல்”
என்றார்.

இளையராணி உத்தரவிட, தேர்களும்,குதிரைகளும், தூசு பறக்கத் திரும்பி, திசையை மாற்றிக்கொண்டு, கோயில் மதில் சுவர் வாசல் முன் போய் நிற்க, எல்லோரும் பரபரப்பானார்கள். வீரர்கள் வேகமாகப் பாதுகாப்பு வளையம் அமைத்தார்கள். மன்னரின் வருகையை கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்க உள்ளே ஓடினார்கள். தேரைவிட்டு வேகமாக இறங்கிய மன்னர் வீரவல்லாளன், தாயை காணப் போகும் பிள்ளையைப்போல, யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல், விறுவிறுவென நடந்தார். அறுபதைக் கடந்த மன்னரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், அரசிகளும் மற்றவர்களும் கிட்டத்தட்ட கூடவே ஓடிவந்தார்கள். கோயிலின் மதில்சுவர் தாண்டி, உள்ளே நுழைந்து, கொடிமரம்முன் கும்ப மரியாதையுடன் அந்தணர்கள் தந்த மரியாதையை அரசிகளுடன் ஏற்றுக்கொண்டு சந்நதி முன்போய் நின்றார்.

ஆளரவமற்ற கருவறைக்குள் பரவியிருந்த மெல்லிய சுடரொளி வெளிச்சத்தில், நறுமணப்புகை சூழ, நாகப் படம் தலைமேல் சூடி, அமைதியாய் அமர்ந்திருந்தான் ஈசன்.
எல்லோரும் வந்துவிட, லிங்க ரூபத்திற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஆரத்தியை கண்டதும், எல்லோரும் “அண்ணாமலையாருக்கு ஆரோகரா” எனப் ஒன்றாய் பிளிறிட, மன்னர் வீரவல்லாளன் மட்டும், அண்ணாமலையாரையே வெறித்துப்பார்துக் கொண்டிருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்தபடி இருந்தது.

தீட்சையின்போது உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை, அவரையும் அறியாமல், மனசு தானாக உச்சரிக்கத் தொடங்கியது. சிலநொடிகளில், சரிவில் வேகமாக உருண்டோடும் சக்கரமாக, மிகவேகமாக உச்சரிக்கத் தொடங்கியது. அப்படி உச்சரிக்க உச்சரிக்க நடுநெற்றியும், நடுமுதுகின் அடிப்பாகமும் வலித்தது. அனலாகியது. கண்ணெல்லாம் எரிந்தது. கண்ணுக்கேதிரே மின்மினிப்பூச்சிகள் போல பொறிப்பொறியாய் ஏதேதோ பறந்தன. இப்படி நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே மனசு, லிங்கரூபம் பார்த்து பேசத் தொடங்கியது. அதாவது, உச்சரிக்கவொன்றும், பேசவொன்றுமாக மனசு இரண்டாகப் பிரிந்து செயல்பட்டது. இவையெல்லாம் மன்னருக்கே வியப்பாகயிருந்தது.

“இதென்ன எனக்குள் இத்தனை திணிக்கிறாய்? உப்பும், காரமும் உண்டு கொழுத்த என் உடம்புக்குள் இதென்ன இத்தனை மாயம் செய்கிறாய்?. எத்தனைமுறை உன்னை தரிசிக்க வந்திருப்பேன். பேசுகிற இந்த மனோபாவம் நான் கொண்டதேயில்லை. நீயும் கதை கேட்கும் சிறுவன்போல, கேட்டதுமில்லை. எதற்கும் தகாதவனைய்யா நான். பேசாமல், ‘தின்னு கழிஞ்சு’ ஜீவனாய் முடிந்துவிட்டுப் போகிறேனே. எனக்கெதற்கு என்னென்னவோ கனவில் காட்டுகிறாய்., என் ஜனங்களுக்கே ஏதும் செய்யத் துப்பில்லாதவன் நான். உனக்கென்ன செய்துவிட முடியும்?. எது நானுனக்கு செய்ய வேண்டும்?. அல்லது என்னை நீ ஏது செய்ய உத்தேசம்?”

இத்தனையும் அண்ணாமலையாரை வெறித்துப் பார்த்துக்கொண்டு மனதால் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியே பாறை சுமக்கிற பணியாட்களில் யாரோ எவரிடமோ சத்தமாக “எல்லாவற்றையும் ஒன்றாக்கி இறுக்கிக் கட்டு,” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலமாக்கிக் கட்டு” என்று கத்திக் கொண்டிருந்தார்கள்.

அக்குரலைக் காதில் வாங்கி நிமிர்ந்த மன்னர், “இதுதான் உன்பதிலா? பதிலெனில், எதை ஒன்றாக்குவது? எதை இறுக்கிக்கட்டுவது?” மீண்டும் லிங்கம் பார்த்துப்பேசினார். மீண்டும் வெளியிலிருந்து குரல் கேட்டது. ‘‘சொல்வது புரியவில்லையா?. தனித்தனியாக இருந்தால் வெறும்பாறை. ஒன்றின்மேல் ஒன்று ஏற்றி, ஒன்றாக்கினால்தான் கோபுரம். அதுபோல பிரிந்திருப்பதையெல்லாம் ஒன்றாக்கு. எல்லாவற்றையும் மொத்தமாய்ச் சேர்த்து இறுக்கிக்கட்டு. புரிந்ததா?” என்று கத்தினார்கள்.

மன்னருக்குள் ஏதோ பொறி தட்டியது. என்னவென்றுதான் புரியவில்லை. மன்னர் வீரவல்லாளன் அண்ணாமலையாரை மீண்டும் வணங்கிவிட்டு, சந்நதிவிட்டு வெளியேறினார். அரசிகளிடம் “நீங்கள் அரண்மனைக்கு திரும்பி, பயணக் களைப்பு தீர இளைப்பாறுங்கள். நான் கோபுரப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறேன்” என விடை கொடுத்தார். அரசிகள் பணிந்து, வணங்கி விடைபெற, அருணைக்குத் திரும்பியதும் தங்களோடு இணைந்துகொண்ட மாதப்ப தண்ட நாயகருடன், வேகமாக கோபுரப்பணிகள் நடக்குமிடம்நோக்கி விரைந்தார்.

அங்கு நான்கு புறமும் கோபுரப் பணிகள் வேகவேகமாக நடந்து கொண்டிருந்தது. குறிப்பாக, கிழக்குக் கோபுரம் நல்ல உயரத்தில் எழும்பியிருந்தது.இரவீந்திர பெருந்தச்சன் ஓடோடி வந்து வரவேற்றார். அவரை மன்னர் அணைத்துக் கொண்டார். சிற்பிகள் உற்சாகமாக, “மாமன்னர் வாழ்க. ஹொய்சாலம் வெல்க” என வாழ்த்துப்பா பாடினர். சிற்பிகளைப் பார்த்து கையசைத்த மன்னர், தலைமைச் சிற்பியிடம், “எப்படிப் போகின்றது பணி?” என்றார்.

“அற்புதமாக நடக்கின்றது அரசே. முதலில் கிழக்குக் கோபுரத்திற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இன்னும் இரண்டுவாரத்திற்குள் முதல் நிலைவரை எழும்பிவிடும்”. “சந்தோசம் பெருந்தச்சரே. மற்ற திசைகளில்?

“கிழக்குக் கோபுரம் பணிகளுக்கே மும்முரம் தருகிறோம். மற்ற திசைக் கோபுரங்கள் முதல் நிலைவரை நடக்கும். அவைகளின் அடுத்தடுத்த நிலைகள், நிதானமாக எழுப்ப உத்தேசம்.” “இல்லை. நான்கு திசைப் பணிகளையும் மும்முரப்படுத்துங்கள். முழுமையாய் ஒரு கோபுரம். மொட்டையாய் மூன்று கோபுரங்கள். நன்றாகவா இருக்கும்.”“இல்லை, வடக்குத்தான் தொல்லை வர வாய்ப்பிருக்கிறதென” பெருந்தச்சர் இழுத்தார்.மன்னர் பெருந்தச்சரின் தோளில் பிரியத்துடன் கைவைத்தார்.

“பெருந்தச்சரே, அது என் கவலை. என் பொறுப்பும்கூட. வந்தாலும் ஒரு துரும்புகூட உங்கள்மீது விழாது. நீங்கள் நான்கு புறமும் கவனம் செலுத்துங்கள்” “அப்படியே செய்கிறோம் அரசே” பெருந்தச்சர் பணிவுடன் தலையாட்டினார்.“பிறகு, இளையராணி உங்களிடம் விண்ணப்பித்ததுபோல, எனக்கொரு விண்ணப்பமுண்டு. செய்வீர்களா பெருந்தச்சரே?” மன்னர் சிரித்துக்கொண்டே கேட்டார்.இரவீந்திரப் பெருந்தச்சன் பதறினார். “அய்யோ, உத்தரவிடுங்கள் அரசே”மன்னர் சிரித்து அவரை சகஜமாக்கினார். “இரண்டு வாரங்களில் முதல்நிலைவரை எழும்பிவிடும் என்றீர்கள்தானே.” “ஆமாம் அரசே.” “அதன்மேல் வருகிற சுதைச் சிற்பங்களில், நான் கூறுவதுபோல சிற்பங்கள் கொண்டுவர முடியுமா?”
“நிச்சயமாக. எந்தப் புராணத்திலிருந்து கொண்டு வரவேண்டுமென சொல்லுங்கள்’’“என் கனவுப் புராணத்திலிருந்து”.

மன்னர் சிரித்துக்கொண்டே சொன்னார். புரியாமல் விழித்த பெருந்தச்சருக்கு, தான்கண்ட கனவுபற்றி, கதைபோல விவரித்தார். சிவம் பூத கணங்களோடு பூமியில் இறங்கியதில் தொடங்கி, முடிவாக சிவம் ஒளி வடிவாக காட்சி தந்தது வரை விவரித்தார்.“இது கனவா? இல்லை, உண்மையில் நிகழ்ந்ததா?” உடன் நின்று, கனவைக் கேட்ட பிரமிப்பில், தளபதி மாதப்ப தண்டநாயகர் வியப்புடன் கேட்டார்.“கனவெனில் கனவு. நிகழ்ந்ததென நம்பினால் நிகழ்வு” மன்னர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.இரவீந்திரபெருந்தச்சரோ, “அற்புதமான சிந்தனையோட்டம். நிச்சயம் முதல்தளத்தில் இவையெல்லாம் சுதைச் சிற்பமாக வரும்” என சிலாகித்தார்.

பேசிக்கொண்டிருக்கும்போதே, படைவீரனொருவன் ஓலையொன்றைச் சுமந்தபடி வந்தான். மாதப்ப தண்டநாயகரிடம் தந்தான். வாங்கிப் பிரித்து, வாசித்துப் பார்த்த படைத்தளபதியின் முகம் மாறியது. அவர் முகம் மாறுவதைக் கவனித்த மன்னர் வீரவல்லாளன், “என்ன ஆயிற்று” என வினவினார்.

“இந்த அருணைச் சமுத்திரம் போருக்குத் தயாராக வேண்டும் போலிருக்கிறது. அரசே.”  “புரியவில்லை.”

“நம் எதிரியான காம்பிளி தேச மன்னனிடமிருந்து ஒரு விண்ணப்பம் வேண்டி ஓலை”“நம் எதிரியிடமிருந்து ஓலையா? அதுவும் விண்ணப்பம் வேண்டி” என மன்னர் உற் சாகக் குரலில் கூவிய வேளையில், “விடாதே, அப்படித்தான் பிரிந்ததையெல்லாம், ஒவ்வொன்றாக இறுக்கிக்கட்டு” என மீண்டும் பணியாள் குரல் கேட்டது. மீண்டும் அதே வார்த்தையைக் கேட்ட மன்னர் அதிர்ந்தார். கோபுரப் பணிகளையெல்லாம் விட காலத்தே, தான் செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றை, அந்தச் சொல் சுரீரென்று அவருக்குப் புரியவைத்தது. அங்கு இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே கணத்தில், அரண்மனையில் தனது அக்காள் மல்லம்மாதேவியுடன் பேசிக்கொண்டிருந்த இளையராணி சல்லம்மா தேவி,, “அக்கா, நம் மன்னரைப் போல நானுமொரு கனவு கண்டேன்.” என்றாள். “என்ன கனவு கண்டாய்” என ஆர்வமுடன் தங்கையிடம் மூத்த ராணி கேட்க, சல்லம்மா தேவி தொடர்ந்தாள்.

“இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. கோட்டைபோல் ஓர் இடம். அங்கு ஓர் உடல் தூக்கிலிடப்பட்டு, ஆடியபடி தொங்குகிறது. முழுமையாகத் தோல் உரிக்கப்பட்டு விகாரமாக தொங்குகிற அந்த உடலை, நான் பயத்துடன் நெருங்குகிறேன். மோசமான வாடையோடு திரும்பியிருக்கிற அந்த உடலை நான் தொட்டுத் திருப்புகிறேன். அது?” இளையராணி இப்போது நடப்பதுபோல முகத்தைப் பொத்திக் கொண்டு, தன்அக்காள் அதிர்ந்து போகும்படி சொன்னாள், “அது மேன்மை பொருந்திய நம் மன்னர்”.

(தொடரும்)

தொகுப்பு: குமரன் லோகபிரியா

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Read Entire Article