*தற்காலிக பணியாளர்கள் குற்றச்சாட்டு
தஞ்சாவூர் : ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளை காப்பறும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தற்காலிக பணியாளர்களை கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ராசா மிராசுதார் மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு 54 நோயாளிகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வேறு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் போது நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் 31க்கும் மேற்பட்டவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை கட்டாயப்படுத்தி நேற்று டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறும் போது.
தீ மற்றும் புகை மண்டலத்திற்குள் நுழைந்து போராடி 50க்கும் மேற்பட்ட நோயாளிகள், குழந்தைகளை தற்காலிக பணியாளர்கள் மீட்டுள்ளனர். இதில் 31பேர் புகையை சுவாசித்ததால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
இதில் 2பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் உயிரை பணயம் வைத்து போராடிய ஊழியர்கள் கவனிப்பாரற்று கிடப்பது கவலைக்குரியதாகும். இவர்களது பாதிப்பை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டப்படுவதும் மிக அவலமான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்.
The post ராசா மிராசுதார் மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சர்ச்சை appeared first on Dinakaran.