போர் நிறுத்தம் எதிரொலி; பாக். எல்லை மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: பாக். சிம் கார்டுகளுக்கு ராஜஸ்தானில் தடை

3 hours ago 2

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததால் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 4 நாள் போர் முடிவுக்கு வந்தது. போரால் பதற்ற நிலையில் இருந்த எல்லை மாநிலங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. அங்கு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. போர் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பாரமுல்லா, குப்வாரா மற்றும் பந்திபோரா ஆகிய எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை நேரில் பார்வையிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் எல்லையில் அமைந்துள்ள அமிர்தசரஸ், டரன் டரன், பதான்கோட், பாசில்கா, பெரோஸ்பூரில் பள்ளிகள் மீண்டும் நேற்று திறக்கப்பட்டன.உளவு பார்த்தல் அச்சம் காரணமாக ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்சால்மர், கங்காநகரில் பாகிஸ்தான் சிம் கார்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச எல்லையிலிருந்து 50 கி.மீ.க்குள் உள்ள கிராமங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியாட்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

துருக்கி ஆப்பிளுக்கு எதிர்ப்பு
பாகிஸ்தானுக்கு உதவி செய்ததால் துருக்கி நாட்டின் ஆப்பிள், மார்பிள்ஸ் இறக்குமதி செய்வதில்லை என்று ராஜஸ்தான், புனே வியாபாரிகள் திடீர் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆப்பிள் இறக்குமதியில் துருக்கிக்கு ரூ. 1,000 கோடியும், மார்பிள்ஸ் இறக்குமதியால் ரூ.2,500 முதல் 3,000 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் ஆர்வம்
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியாவின் பிரம்மோஸ் மீயொலி க்ரூஸ் ஏவுகணையின் புகழ் உலகளவில் உச்சத்தை அடைந்துள்ளது. அதனை வாங்க 17 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. குறிப்பாக மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூணை போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிரம்மோஸை தங்கள் போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களில் நிறுவ ஆர்வம் காட்டுகின்றன. பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசுலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகள் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்புக்காக பிரம்மோசை வாங்க ஆர்வம் காட்டி உள்ளன. எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, பல்கேரியா ஆகியவையும் வெவ்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உள்ளன.

பா.ஜ கூட்டணி முதல்வர்களுடன் மே 25ல் பிரதமர் மோடி சந்திப்பு
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து வரும் 25ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், பாஜ மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி முர்முவுக்கு முப்படைகள் விளக்கம்
பாக். போரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேற்று முப்படைத்தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல்அனில் சவுகான் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைவர் ஏர் சீப் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி ஆகியோருடன் ஜனாதிபதி மாளிகை சென்று அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கினர். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடியை மகத்தான வெற்றியாக மாற்றிய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

பாகிஸ்தானுக்கு ரூ.8,695 கோடி நிதி உதவி வழங்கிய ஐஎம்எப்
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக கடந்த 8ம் தேதி நடந்த சர்வதேச நாணய நிதிய(ஐ.எம்.எப்) கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது. அரசு ஆதரவுடன் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களுக்கு நிதி தவறாக பயன்படுத்தப்படலாம் எனவும் இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில் இந்தியாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ஐஎம்எப் முடிவு செய்தது. இதன்படி, ரூ.8,695 கோடி நிதியை பாகிஸ்தானிடம் ஐஎம்எப் நேற்று வழங்கியது.

The post போர் நிறுத்தம் எதிரொலி; பாக். எல்லை மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: பாக். சிம் கார்டுகளுக்கு ராஜஸ்தானில் தடை appeared first on Dinakaran.

Read Entire Article