புதுடெல்லி: அமெரிக்காவின் ராணுவ அகாடமியில் நவீன மற்றும் தற்கால போர்கள் குறித்து தகவல்களை திரட்டித் தரும் மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நகர்ப்புற போர் முறை ஆய்வுகளின் தலைவர் ஜான் ஸ்பென்சர், இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்த தனது ஆய்வறிக்கையில், ‘‘ஆபரேஷன் சிந்தூருக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
இந்தியா அதன் நோக்கங்களை நிறைவேற்றி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இனி பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுத்தப்படும் தீவிரவாத தாக்குதல்கள் அனைத்தும் போர் செயல்களாக கருதி உறுதியான பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தனது நிலையை மறுவரையறை செய்துள்ளது. இந்தியாவின் வியூகம் பாதுகாப்பு படையின் உறுதியான வலிமையை பறைசாற்றுவதுடன் அதன் உறுதியான நடவடிக்கைகள், தெளிவான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது’’ என கூறி உள்ளார்.
ஆஸ்திரியாவின் ராணுவ வரலாற்று ஆசிரியரும் விமானப்படை நிபுணருமான டாம் கூப்பர் கூறுகையில், ‘‘இந்தியாவின் வான்வழி நடவடிக்கைகள் தெளிவான வெற்றியை பெற்றுள்ளன. பாகிஸ்தானால் தகுந்த பதிலடி தர முடியவில்லை. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி தருவது, அணு ஆயுத பயன்பாடு தொடர்பான அச்சுறுத்தல்கள் பயனளிக்கும் என்ற பாகிஸ்தானின் நம்பிக்கை தோல்வி அடைந்துள்ளது. கடுமையான இழப்புகளை சந்தித்த பிறகு பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் தெளிவான வெற்றியை காட்டுகிறது’’ என கூறி உள்ளார்.
The post ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மகத்தான வெற்றி: சர்வதேச ஆய்வாளர்கள் அறிக்கை appeared first on Dinakaran.