கருணை பொழிவான் கந்தன்... இன்று கார்த்திகை விரத நாள்

4 hours ago 2

முருகப்பெருமானை வழிபடும் முக்கிய விரத நாட்களில் ஒன்று கார்த்திகை விரதம். முருகப்பெருமானை வளர்த்ததால் சிறப்பு பெற்ற கார்த்திகை பெண்களின் நட்சத்திர நாளான கிருத்திகை நட்சத்திரத்தன்று பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில் இன்று முருகப்பெருமானுக்கு உகந்த கார்த்திகை விரத நாள் ஆகும். இன்று விரதம் இருந்து வழிபடுவோருக்கு கருணை பொழிவான் கந்தன். கார்த்திகை விரதம் இருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்பது சிவபெருமானின் வாக்கு.

விரதம் இருப்பவர்கள் காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு முருகப்பெருமானை வழிபாடு செய்யவேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தி நாள் முழுவதும் விரதத்தை தொடரவேண்டும். முறையான விரதத்தை கடைப்பிடிக்கும் பக்தர்கள் முந்தைய நாளில் அதாவது நேற்று பரணி நட்சத்திரத்தில் நண்பகல் உணவு அருந்தியபின் விரதத்தை தொடங்கியிருப்பார்கள்.

இன்று விரத காலத்தில் பாராயணம், தியானம், கோவில் வழிபாடு மேற்கொள்ளலாம். நாளை ரோகிணி அன்று காலையில் நீராடி முருகனை வழிபட்டு அதன்பிறகு உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இவ்வாறு நீண்ட நேரம் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இன்று காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ளலாம். உணவருந்தாமல் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் பால், பழம் சாப்பட்டு விரதம் இருக்கலாம்.

வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருகப்பெருமானுக்குரிய மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்யலாம். கார்த்திகை தினத்தில் முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு பாயசம், இனிப்புகள், பழங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு.

விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும் மிகுந்த பலனை தரும். கோவில்களில் நடக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று கந்தன் கருணை பெறலாம்.


Read Entire Article