ராகு-கேது பெயர்ச்சி பலன்: எந்த ராசிக்கு என்ன பரிகாரம்?

3 hours ago 1

கிரக பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கம் என இரண்டு முறைகளில் கணிக்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டு நிழல் கிரகங்களான ராகு கேது பெயர்ச்சியானது வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 அன்று நடைபெற்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி 18.5.2025 அன்று நிகழ உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ராகு பகவான் பூரட்டாதி 4-ம் பாதம் மீன ராசியில் இருந்து பூரட்டாதி 3-ம் பாதம் கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இதேபோல் கேது பகவான், உத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் இருந்து உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசிக்குள் பிரவேசிக்கிறார்.

இந்த இடப்பெயர்ச்சியால் மேஷம், துலாம், மிதுனம், தனுசு, கன்னி, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் நன்மை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. ரிஷபம், விருச்சிக ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுவார்கள் என்றும், கடகம், மகரம், சிம்மம், கும்ப ராசிகளுக்கு எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம் என்பதால் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ராகு கேது இடப்பெயர்ச்சி காலத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய தெய்வங்கள் மற்றும் பரிகாரம் குறித்து பார்ப்போம்.

மேஷம்: ஞாயிற்றுக்கிழமை இரவு 7-8 மணிக்குள் முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை காலை 10-11 மணி வரையிலான சனி ஓரையில் சிவ வழிபாடு செய்யலாம்.

ரிஷபம்: தினமும் ராகு காலத்தில் மகிஷாசுர மர்த்தினி கவசம் கேட்கலாம். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபட, சங்கடங்கள் விலகும்.

மிதுனம்: இந்த ராசிக்காரர்கள், அவர்களின் சகோதர, சகோதரிகள் கஷ்டத்தில் இருந்தால் அவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதன் மூலம் நல்லருளை பெறலாம். புதன் கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபட நவகிரக தோஷம் விலகும்.

கடகம்: அரச மரத்தடியில் இரண்டு சர்ப்பங்கள் இணைந்த சிலைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமை பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். குரு பகவானையும் வழிபடலாம்.

சிம்மம்: தானியங்களை பொடியாக்கி நாட்டு சர்க்கரை கலந்து அரச மரத்தின் அடியில் உள்ள எறும்பு புற்றில் தூவ, நவகிரக தோஷம் விலகும். லட்சுமி நரசிம்மரை வழிட்டு பானகம் தானம் செய்யலாம்.

கன்னி: தினமும் கந்த சஷ்டி கவசம், லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீட்டில் ஒலிக்கவிடலாம், சனிக்கிழமை 7 பேருக்கு அன்னதானம் தண்ணீருடன் வழங்குவது சிறப்பான பலனை பெற்றுதரும்.

துலாம்: பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைளில் குல தெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையிலிட உன்னத பலன் கிடைத்து தன்னிறைவு உண்டாகும். தினமும் பட்சிகளுக்கு உணவிட வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக ஸ்வாமியை வழிபட சகல விதமான நன்மைகளும் உண்டாகும். வீட்டில் 27 செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு சிகப்பு அரளி சாற்றி நெய் தீபம் ஏற்றி கந்த குரு கவசம் பாராயணம் செய்து வந்தால் சொந்த வீடு, நிலம் அமைவதற்கான யோகம் வாய்க்கப்பெறும்.

தனுசு: ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையிலும் தேய்பிறை அஷ்டமி நாளிலும் கால பைரவரை வணங்கி வந்தால் சனி, ராகு, கேதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். புதன்கிழமைகளில் பெருமாள் அல்லது சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்வது நல்லது.

மகரம்: தினமும் ராகு காலத்தில் துர்கை மற்றும் காளியை வழிபடுவதால் சிறந்த பலன் கிடைக்கும். தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் மிருத்யுஞ்ஜெய மந்திரம் படித்தால் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயமும் அகலும்.

கும்பம்: தினமும் ராகு காலத்தில் மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்திரம் கேட்க வேண்டும். சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும். சனிக்கிழமைகளில் அனுமன் சாலிசா படித்து அல்லது கேட்டு வர நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்: சனிக்கிழமைகளில் நவகிரகங்களை வழிபட வேண்டும். இன்னல்கள் நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடலாம்.

Read Entire Article