
சென்னை திரு.வி.க.நகர் கென்னடி ஸ்கொயர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (23 வயது). பாலிடெக்னிக் முடித்துவிட்டு கடந்த 2 வருடங்களாக அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். விஸ்வநாதன் கடந்த 7 வருடங்களாக தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக அந்த பெண் சரிவர பேசாமல் காதலிப்பதை விட்டு விடுமாறு விஸ்வநாதனிடம் கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறிய விஸ்வநாதன் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது விஸ்வநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விஸ்வநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.