
சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தான் மட்டும் இருந்திருந்தால் விராட் கோலியை இவ்வளவு விரைவாக ஓய்வு பெற விட்டிருக்க மாட்டேன் என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் ஆவேசமாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலி ஒரு தனித்துவமான திறமை உடைய வீரர். அவரிடம் இருக்கும் நேர்மை, ஒழுக்கம் மற்றும் உழைப்பு என அனைத்தையும் பார்த்துதான் நான் அவரை இந்திய அணியில் தேர்வு செய்தேன். முதல் முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது நான் அவரை தேர்வு செய்து அனுப்பியதும் பலரும் என்னுடைய அந்த தேர்வை சந்தேகமாக பார்த்தார்கள்.
ஒரு இளம் வீரரை ஒரு தேர்வாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த வெற்றியாளராக இருப்பார் என்று நினைத்து தேர்ந்தெடுப்பீர்கள். அதன் பிறகு இத்தனை ஆண்டுகள் அவர் செய்ததெல்லாம் வரலாறு. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள விராட் கோலி இந்திய அணியின் அடுத்த கட்ட நகர்விற்கும் காரணமாக இருந்திருக்கிறார்.
நான் மட்டும் தற்போது தலைவராக இருந்திருந்தால் அவரை இவ்வளவு விரைவாக ஓய்வுபெற விட்டிருக்க மாட்டேன். மேலும் விராட் கோலிக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவியை வழங்கி இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்திருப்பேன். அதோடு இந்திய அணி நீங்கள் கேப்டனாக இருந்தபோது மிகச்சிறப்பான நிலையில் இருந்தது. தற்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் மீண்டும் பழைய மாதிரி டெஸ்ட் அணியை கொண்டு வந்து விட்டு பின்னர் ஓய்வு பெறுங்கள் என்று கூறி தொடர்ந்து விளையாட வைத்திருப்பேன்" என கூறினார்.