
திருவனந்தபுரம்,
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை விமர்சித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவை சேர்ந்த ரஜாஸ் ஷபா சைதீப் (வயது 26) என்ற நபரை மராட்டிய போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டியத்தின் லடக்கஞ்ச் பகுதியில் வசித்துவந்த ரஜாஸ் ஷபாவை அம்மாநில போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரஜாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், கைது செய்யப்பட்ட ராஜாசின் வீடு கேரளாவின் கோச்சியில் உள்ளது. அந்த வீட்டில் மராட்டிய போலீசார் சோதனை செய்து பல்வேறு மின் கருவிகளை பறிமுதல் செய்தனர்.