
புதுடெல்லி,
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், 2022 முதல் 2024 வரையிலான 2 ஆண்டுகளில் நடந்த ராகிங் சம்பவங்களை பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை சேவ் (கல்வியில் வன்முறைக்கு எதிரான சமூகம்) என்ற இதழில் வெளியானது.
இதன்படி, 51 பேர் ராகிங் கொடுமையால் மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவற்றில், மருத்துவ கல்லூரிகளே அதிக பாதிப்புக்கான முக்கிய இடங்களாக கண்டறியப்பட்டு உள்ளன. மொத்த புகார்களில் இருந்து, 38.6 சதவீதம் வரை மருத்துவ கல்லூரிகளிலேயே ராகிங் கொடுமை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
1,946 கல்லூரிகளில் தேசிய ராகிங் ஒழிப்புக்கான உதவி எண்ணில் 3,156 புகார்கள் பதிவாகி உள்ளன. மருத்துவ கல்லூரிகளில் 2 ஆண்டுகளில் 35.4 சதவீதம் வரை தீவிர புகார்களும், 45.1 சதவீதம் அளவுக்கு ராகிங் தொடர்புடைய மரணங்களும் பதிவாகி உள்ளன.
இந்த காலகட்டத்தில் ராகிங் கொடுமைக்கு மொத்தம் 51 பேர் பலியாகி உள்ளனர். இது, கோடா நகரில் தற்கொலை செய்து கொண்ட 57 மாணவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இதுதவிர கல்லூரிகள் மற்றும் போலீசில் நேரடியாக பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
எனினும், பாதுகாப்பு அச்சத்தினால் பலர் அமைதியாக இருந்து விடும் சூழலில், தீவிர ராகிங் கொடுமைகளின் எண்ணிக்கை உண்மையில் பெரிய அளவில் இருக்கும் என்றும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான நபர்களே துணிச்சலுடன் முன்வந்து புகாராக அளிக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட நபர்களின் அடையாளங்களை பாதுகாக்க, பெயர் இல்லாத புகார்களும் ஏற்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது. ராகிங் ஒழிப்பு குழுக்களை கல்லூரிகள் அமைக்க வேண்டும். விடுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்க வேண்டும். அதற்காக குழுக்கள் மற்றும் பெற்றோரும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறிக்கை சுட்டி காட்டியிருக்கிறது.
புதிய மாணவர்கள் தனியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட வேண்டும் என ஒழுங்குமுறை விதிகளை சுட்டி காட்டிய அறிக்கை, தீவிர ராகிங் வழக்குகள் 24 மணிநேரத்தில் புகாராக போலீசில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.