
போபால்,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்தது.
இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர், ராணுவ கர்னல் சோபியா குரேஷி , விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். இந்த சூழலில், மத்தியபிரதேச பா.ஜ.க. மந்திரி கன்வார் விஜய் ஷா, கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மன்பூர் பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. மந்திரி விஜய் ஷா கூறுகையில், மோடி நாட்டிற்காக பாடுபடுகிறார். பஹல்காம் தாக்குதலில் நமது மகள்களை கைம்பெண் ஆக்கியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்களின் மதத்தை சேர்ந்த சகோதரியை நாம் அனுப்பினோம். எங்கள் சகோதரியை கைம்பெண் ஆக்கினால் உங்கள் ஆடையை கழற்ற உங்கள் மதத்தை சேர்ந்த சகோதரியே வருவார்' என்று கூறியிருந்தார்.
கர்னல் சோபியா குரேஷியை மேற்கோள்காட்டி அவதூறு கருத்து தெரிவித்த கன்வார் விஜய் ஷாவிற்கு கண்டனம் எழுந்த நிலையில் தனது பேச்சுக்கு அவர் மன்னிப்புகேட்டார். அதேவேளை, கன்வார் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில டி.ஜி.பி.க்கு, மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க. மந்திரி கன்வார் விஜய் ஷா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பிரிவுகள் 152, 196(1)(b), மற்றும் 197(1)(c) இன் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக மத்தியப் பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ் அலுவலகம் தனது எக்ஸ் வலைதளத்தில், "மத்தியப் பிரதேச ஐகோர்ட்டின் உத்தரவைத் தொடர்ந்து, மந்திரி விஜய் ஷாவின் அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க முதல்-மந்திரி அறிவுறுத்தியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளது.