
புதுடெல்லி,
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, மார்ச் மாதத்தில் அவரது டெல்லி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்ட உள்மட்ட விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி மேத்யு நெடும்பரா உள்பட 4 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவை அவசர விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர்களின் வக்கீல் ஆஜராகி கேட்டுக்கொண்டார். ஆனால், உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு வக்கீலிடம் கூறிய நீதிபதிகள், அவசர விசாரணைக்கு பட்டியலிட மறுத்து விட்டனர்.