ரஷியா - உக்ரைன் பரஸ்பரம் டிரோன் தாக்குதல்

1 hour ago 4

மாஸ்கோ,

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 115வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களுக்குமுன் உக்ரைன், அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ரஷியா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்தது.

அதேபோல், 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ரஷிய அதிபர் புதினும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், போர் நிறுத்தம் தொடர்பாக அவர் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக புதின் கூறுகையில்,

போர் நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்றால் ஒரு சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும்.உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கான தனது லட்சியங்களை கைவிட வேண்டும். ரஷியாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படைகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும். உக்ரைன் துருப்புகளை அணி திரட்டுவது மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன் ராணுவத்தின் அளவு மட்டுப்படுத்தப்பட வேண்டும். உக்ரைனில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என்றார். இந்த நிபந்தனைகள் சாத்தியமற்றது என உக்ரைன் கூறியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விக்ஆப் ரஷியா சென்றுள்ளார். அவர் அதிபர் புதினை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது போர் நிறுத்தம் தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நடுவே உக்ரைன், ரஷியா பரஸ்பரம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் வோல்கொகர்ட், வரோன்சி, பெல்ஹொரொட், ரோஸ்டவ், கர்ஸ்க் உள்ளிட்ட பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. 126 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவை அனைத்தும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

அதேபோல், உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. 178 டிரோன்கள் ஏவப்பட்ட நிலையில் இவற்றில் பெரும்பாலான நடுவனில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.   

Read Entire Article