
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்.
இந்த தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முன்னதாக கடந்த 2021-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அதில் மோசமாக செயல்பட்டார். 3 போட்டிகளில் விளையாடி அதில் ஒரு வில்க்கெட் கூட கைப்பற்றாததால் பெரும் விமர்சனத்தை சந்தித்தார்.
அதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், கடந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா கோப்பை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் அசத்தியதால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்ட வருண் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இந்நிலையில் 2021-ல் சந்தித்த இன்னல்களை தாண்டி தற்போது இந்திய அணியில் கம்பேக் கொடுத்தது பற்றி சமீபத்திய பேட்டியில் வருண் சக்கரவர்த்தி விரிவாக கூறியுள்ளார்.
வருண் சக்ரவர்த்தி அளித்த பேட்டியில், "அது (2021) எனக்கு இருண்ட நேரமாக இருந்தது. நான் மன உளைச்சலில் இருந்தேன். ஏனெனில் நிறைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்ட என்னால் அந்த வாய்ப்பை நியாயப்படுத்த முடியவில்லை. ஒரு விக்கெட் கூட எடுக்காததற்காக வருந்தினேன். பின்னர் 3 வருடங்கள் வாய்ப்பு கிடைக்காததால் இந்திய அணியில் அறிமுகமானதை விட மீண்டும் திரும்புவது கடினம் என்று நினைத்தேன்.
அந்த காலகட்டங்களில் எனது தினசரி வாழ்க்கை உட்பட பல்வேறு விஷயங்களை மாற்ற வேண்டி இருந்தது. முன்பெல்லாம் ஒரு செஷனில் 50 பந்துகள் மட்டுமே பயிற்சிகளை எடுத்த நான் அதை இரட்டிப்பாக வேண்டியிருந்தது. இந்திய அணிக்காக விளையாட தேர்வாளர்கள் அழைப்பார்களா? என்பது தெரியாமலேயே இருந்தது மிகவும் கடினமாக இருந்தது. 3 வருடங்கள் கழித்து அனைத்தும் முடிந்து விட்டதாக நினைத்தேன்.
இருப்பினும் ஐ.பி.எல். கோப்பையை வென்றபோது மீண்டும் விளையாட அழைப்பு வந்தது. அதன் பின் மகிழ்ச்சியடைந்தேன். பின்னர் அனைத்து நல்ல விஷயங்களும் ஒரே எடுப்பில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 2021 உலகக்கோப்பை முடிந்த பின் இந்திய அணிக்கு மீண்டும் விளையாட வராதீர்கள், உங்களால் முயற்சித்தாலும் அது முடியாது என்ற வகையில் எனக்கு மிரட்டலான அழைப்புகள் வந்தன.
சில நேரங்களில் மறைந்து இருக்க வேண்டியிருந்தது. விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது சிலர் தங்களது பைக்கில் என்னை பின்தொடர்ந்தனர். அவ்வாறு நடப்பது சகஜம். ரசிகர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் அப்படிப்பட்ட எனக்கு தற்போது பாராட்டுகள் வருவது மகிழ்ச்சியை கொடுக்கிறது" என்று கூறினார்.