
அமராவதி,
மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக நேற்று தனது ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று பேசியிருந்தார்.
பவன் கல்யாணின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "மொழி தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது" என்று பதிவிட்டார்.
மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு முன் பவன் கல்யாண் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவை கனிமொழி எம்.பி. பகிர்ந்தார். அதில், "வட இந்திய அரசியல் தலைமை இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையை புரிந்து கொண்டு மதிப்பளிக்க வேண்டும்" என்று பவன் கல்யாண் கூறியிருக்கிறார். இதையும், பவன் கல்யாணின் தற்போதைய பேச்சையும் குறிப்பிட்டு, 'பா.ஜ.க.வுக்கு முன், பா.ஜ.க.வுக்கு பின்' என்று கனிமொழி எம்.பி. பதிவிட்டார்.
இந்த நிலையில், இந்தியை ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும், இந்தியை கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்ததாகவும் பவன் கல்யாண் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதோ அல்லது ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதோ, இரண்டும் நமது பாரதத்தின் தேசிய மற்றும் கலாசார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது.
இந்தி மொழியை நான் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அதை கட்டாயமாக்குவதை மட்டுமே நான் எதிர்த்தேன். தேசிய கல்விக் கொள்கை இந்தியை திணிக்கவில்லை. இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து தவறான தகவலை பரப்புவது, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கான முயற்சியாகும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியுடன், இரண்டு இந்திய மொழிகளை (அவர்களின் தாய்மொழி உட்பட) கற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்தி படிக்க விரும்பவில்லை என்றால், தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மீரி, ஒடியா, பெங்காலி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மெய்தி, நேபாளி, சந்தாலி, உருது அல்லது வேறு எந்த இந்திய மொழியையும் தேர்வு செய்யலாம்.
மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களுக்கு விருப்பத்தேர்வை வழங்கவும், தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும், இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைக்கு அரசியல் நோக்கங்களுக்காக தவறாக பொருள் கூறுவதும், பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்று கூறுவதும் தவறான புரிதலின் வெளிப்பாடாகும்."
இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.