புதுடெல்லி,
'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரஷியா சென்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோரும் கசான் நகருக்கு சென்றிருந்தனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் அனைத்து தலைவர்களுக்கும் புதின் விருந்து அளித்தார். மாநாட்டின் 2-வது நாளான நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் அவர்களின் முதலாவது முன்கூட்டியே திட்டமிட்ட சந்திப்பு ஆகும். இதற்கு முந்தைய திட்டமிட்ட சந்திப்பு, 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் நடந்தது.
அதன்பிறகு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம், ஜி-20 தலைவர்களுக்கு இந்தோனேசிய அதிபர் விருந்து அளித்தபோது, பிரதமர் மோடியும், ஜின்பிங்கும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து, ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், ஜோகனஸ்பர்க் நகரில் இருவரும் எதிர்பாராமல் பேசிக்கொண்டனர். கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கில் இருநாட்டு வீரர்களிடையே மோதல் நடந்த பிறகு, இதுதான் அவர்கள் இடையிலான முதலாவது திட்டமிட்ட சந்திப்பு ஆகும்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் முறையாக கையாள வேண்டும் என்றும், அவை அமைதியை சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இதையடுத்து,, பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதே போல ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயீத் அல் நஹ்யானையும் மோடி நேரில் சந்தித்து பேசினார். பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவு பெற்ற நிலையில்,பிரதமர் மோடி தனது 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரஷியாவில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து புறபட்ட பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.