
திருமலை,
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான சத்திரத்தில் அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் இந்த அன்னதான சத்திரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் இறந்துவிட்டடதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்தும் உண்மை நிலவரங்களை விளக்கியும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 22-ம் தேதி இரவு கர்நாடகாவின் மடிகேராவைச் சேர்ந்த மஞ்சுநாதா என்ற சிறுவன், திருமலை அன்னபிரசாத சத்திரத்தில் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தபோது மயங்கி விழுந்தான். அங்கிருந்த ஊழியர்கள் விரைந்து சென்று சிறுவனை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், சிறுவன் திருப்பதியில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த சிறுவன் இறந்துவிட்டான்.
அந்தச் சிறுவன் நீண்ட காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு வருடங்களுக்கு முன்பு அவனுக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
உண்மை நிலவரம் இவ்வாறு இருந்தாலும், திருமலையில் உள்ள அன்னதான சத்திரத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக சிறுவன் இறந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையல்ல.
இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுபவர்கள், உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேவஸ்தானம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.