சென்னை: ரம்ஜான், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் பல்வேறு சந்தைகளில் ரூ.22 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. யுகாதி பண்டிகை நாளை(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை ஜோராக நடந்தது. ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. சுமார் ரூ.10 கோடி அளவில் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமை ஆடு சந்தை நேற்று களை கட்டியது. இங்கு சுமார் ரூ.3 கோடிக்கும், கடலூர் மாவட்டம் வேப்பூரில் சுமார் ரூ.4 கோடிக்கும் ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஆட்டுச்சந்தை தொடங்கியது. ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனையாகின. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு துவங்கிய ஆட்டுச்சந்தை நேற்று அதிகாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ரம்ஜான், யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரூ.22 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.