ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

5 hours ago 2

சென்னை: ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் அமைத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பைசரான் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்புகொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300, 9289516712 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர உதவி மையம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article