* 22 நாட்களில் ரூ.5920 அளவுக்கு எகிறியது
* அட்சயதிரியை நெருங்கி வரும் நேரத்தில் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. 22 நாட்களில் தங்கம் விலை ரூ.5920 அளவுக்கு எகிறியுள்ளது. அட்சயதிரியை நெருங்கி வரும் நேரத்தில் தங்கம் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதாவது 9ம் தேதி ஒரு பவுன் ரூ.67,280, 10ம் பவுன் ரூ.68,480, 11ம் தேதி ரூ.69,960, 12ம் தேதி ரூ.70,160க்கு விற்பனையானது. அப்போது இந்த விலை இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனை தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமல்லாமல் தினம், தினம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது.
நேற்று முன்தினம் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனையானது. இந்த விலை என்பது இதற்கு முன்னர் இருந்த அனைத்து உச்சப்பட்ச விலையையும் முறியடித்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து நகை வாங்குபவர்கள் மீள்வதற்குள் நேற்று தங்கம் விலை மேலும் ஜெட் வேகத்தில் உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சியில் உறைய வைத்தது என்று தான் சொல்ல முடியும். அந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதாவது நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290க்கும், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தையும் பதிவு செய்தது.
மேலும் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 22ம் தேதி(நேற்று)வரை ஒரு பவுன் தங்கம் ரூ.5920 அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதாவது ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இதனால், அந்த தினத்தில் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் நினைப்பது உண்டு. இந்த நிலையில் இந்த ஆண்டு அட்சய திருதியை வருகிற 30ம் தேதி வருகிறது. இன்னும் 7 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த நேரத்தில் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது அட்சய திரிதியை அன்று நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியையும், கூடுதல் செலவையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தங்கம் தங்கம் நகை வியாபாரிகள் கூறுகையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் தற்போது சீனாவுக்கு எதிராக தீவிரமடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை பாதுகாக்கும் நோக்கில் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்கின்றனர். மேலும், பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டு வருகிறது. இது ேபான்ற காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.
வரும் நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தாலும், மீண்டும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.90 ஆயிரம் வரை அதிகரிக்க கூடும். அடுத்த ஆண்டு ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார். தங்கம் விலை அதிகரித்த போதிலும் நகைக்கடைகளில் விற்பனை குறையவிலை என்று கூறப்படுகிறது. வழக்கம் போலவே நடந்து வருவதாக கூறப்படுகிறது. எங்கே இன்னும் விலை அதிகரித்து விடுமே என்ற பயத்தில் நகை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
The post தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் பவுன் ரூ.2,200 உயர்ந்தது appeared first on Dinakaran.