
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
வாழ்வில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் ரமலான் திருநாளை உலகெங்கும் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
''நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாவிடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார். அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை செய்வது அது போன்ற பத்து மடங்கு நன்மைகளை பெற்றுத் தரும்'' என்று இறைதூதர் கூறியதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ரமலான் திருநாள் என்பது ஒரு புனிதமான அனுபவம் ஆகும். இஸ்லாம் எத்தகைய நன்னெறிகளை கற்பிக்கிறதோ, அவை அனைத்தையும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் காலம் தான் ரமலான் திருநாள் ஆகும். இஸ்லாம் கற்பிக்கும் நன்னெறிகளில் முதன்மையானது மதுவை விலக்குதல் ஆகும். மது அருந்துவதும், மதுவை உற்பத்தி செய்து விற்பதும் சாத்தானின் செயல்கள் என்று நன்னெறி நூலான திருக்குர் ஆன் கூறுகிறது.
ஈகைத் திருநாளின் நோக்கம் என்பது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; நிம்மதியாக வாழ வேண்டும் என்பது தான். இஸ்லாம் மார்க்கமும் இதைத் தான் உணர்த்துகிறது. ஆனால், இந்த எண்ணங்களுக்கு மாறாக மது என்ற சாத்தானின் ஆதிக்கம் தான் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. மது அரக்கனை ஒழிக்கும் நாளில் தான் தமிழ்நாடு புனிதம் பெறும். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும்; உலகெங்கும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம், ஒற்றுமை, மகிழ்ச்சி ஆகியவை தழைக்கவும் உழைக்க இந்த புனிதமான நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.