
மதுரை,
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி-சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.
மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் வைபவம் இன்று நடைபெறுகிறது. இதன்படி, இன்றிரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள ஆறு கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்குவார்கள். அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனுடன் அம்மன் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் 8-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு மேற்கு ஆடி வீதிகள் சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த விழாவை காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவார்கள். அதே போன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து தெய்வானை, முருகப்பெருமானும், பவளகனிவாய் பெருமாளும் வந்து பங்கேற்பார்கள். மறுநாள் (9-ந்தேதி) மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது.
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி திருக்கல்யாணத்திற்கான சிறப்பு கட்டண அனுமதி சீட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன்படி, 8-ந்தேதி நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 என 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகம் செய்யப்படும்.
ரூ.200 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 3 ஆயிரம் பேரும், ரூ.500 சிறப்பு கட்டண சீட்டு மூலம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் புக் செய்த பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு கட்டண பாஸ் வழங்கப்படுகிறது. சிறப்பு கட்டண சீட்டு பெற மதுரை மேல சித்திரை வீதி பகுதியில் உள்ள பிர்லா விடுதியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.