சென்னை,
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"ரத்தன் டாடா என்னுடைய தனிப்பட்ட ஹீரோ. என் வாழ்நாள் முழுவதும் அவரை நான் பின்பற்ற முயற்சித்திருக்கிறேன். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள், என்றென்றும் நவீன இந்தியாவின் வரலாற்றில் பொறிக்கப்படும். அவரது உண்மையான செல்வம் பணத்தை சார்ந்தது இல்லை, மாறாக அவரது நெறிமுறைகள், நேர்மை, பணிவு மற்றும் தேசபக்தி ஆகியவற்றில் உள்ளது.
2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, நான் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்தபோது அவரை சந்தித்தேன். மிகவும் நெருக்கடியின் அந்த தருணத்தில், அவர் ஒரு பலமான ஆளுமையாக நிமிர்ந்து நின்றார். இந்தியாவை மீண்டும் கட்டமைப்பதற்கான தேசத்தின் உருவகமாக அவர் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், டாடா குழுமம் மற்றும் எனது சக இந்தியர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்."
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.