மும்பை,
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிகளை மும்பையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இணைந்து அறிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் இந்தியாவின் உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த 6-7 ஆண்டுகளாக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அட்டவணையை பாருங்கள். நாங்கள் 45 நாட்கள் கூட வீட்டில் இருப்பதில்லை. ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த பின்னர் சிறிது நேரம் கிடைக்கும்.
ஆனால் அப்போது உள்ளூர் போட்டிகள் நடைபெறுவதில்லை. நமது உள்ளூர் போட்டிகள் அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் நிறைவடைகிறது. இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடாத வீரர்கள், உள்ளூர் போட்டிகள் நடைபெறும்போது அதில் பங்குபெற்று விளையாடலாம். கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களில் இடம்பெற்று விளையாடி வருகிறேன்.
அதனால், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு நேரம் கிடைப்பது மிகவும் அரிது. சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடும்போது உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சிறிது ஓய்வு தேவைப்படும். யாரும் உள்ளூர் போட்டிகளை விளையாடக்கூடாது என்று நினைப்பதில்லை. அதனை குறைத்து மதிப்பிடுவதும் இல்லை. ரஞ்சி கோப்பை தொடரில் வரும் 23ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்திற்கு தயாராக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.