ரஞ்சி கோப்பை: 12 வருடங்களுக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலி 6 ரன்களில் அவுட்.. ரசிகர்கள் ஏமாற்றம்

1 week ago 2

புதுடெல்லி,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குள் நுழையும். இதன் 7-வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

அதன்படி டி பிரிவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் டெல்லி- ரெயில்வே அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் 12 வருடங்களுக்கு பிறகு ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கியுள்ளார். இதனால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. எதிர்பார்ப்பையும் மீறி 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

இத்தகைய சூழலில் ஆட்டம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 67.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் அடித்திருந்தது.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி மேற்கொண்டு ஒரு விக்கெட்டை இழந்ததும், நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கினார். உள்ளூர் ரசிகர்களின் பெரும் ஆதரவோடு களமிறங்கி 15 பந்துகளை சந்தித்த அவர் 6 ரன்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதனால் அவரது ஆட்டத்தை காண வந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பல ரசிகர்கள் விராட் ஆட்டமிழந்ததும் மைதானத்தை விட்டு வெளியேற தொடங்கினர்.

Read Entire Article