"ரகுமான் மீது அவதூறு பரப்பாதீர்கள்.." - விவாகரத்து குறித்து ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு

2 months ago 7

மும்பை,

இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ளார். எத்தனையோ விருதுகளை பெற்று பெருமை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கார் விருது வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ரா பானுவுக்கும் 1995-ம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஜீமா என்ற 2 மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக ஏ.ஆர்.ரகுமான் - சாய்ரா பானு வலம் வந்தனர். இருவரும் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் காதலை பகிர்ந்து வந்தனர். இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த விவாகரத்து முடிவை எடுத்திருப்பதாகவும், ஏ.ஆர்.ரகுமானுடனான தனது திருமண பந்தத்தை முறித்து கொள்வதாகவும் சாய்ரா பானு அறிவித்திருந்தார்.

29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமானும் அதனை உறுதி செய்திருந்தார். இந்த அறிவிப்பு ரகுமானின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

இந்த சூழலில், இவர்களது பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் வகையில் வீடியோக்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கூறி ஏ.ஆர்.ரகுமான் சார்பில் அவரது வழக்கறிஞர் நர்மதா சம்பத், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும், யூடியூபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த அவதூறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு, விவாகரத்து முடிவு குறித்து ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பான அந்த ஆடியோவில், "ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். இந்த உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அவர். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரை பார்க்க முடியாது. கடந்த சில மாதங்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக நான் மும்பையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். இதன் காரணமாக தான் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்ச காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

என் உடல்நிலை காரணமாக தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது. அவர் அந்தளவு சிறந்த மனிதர். நான் அவரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன். சிகிச்சை முடிந்தவுடன் விரைவில் நான் சென்னை திரும்புவேன். அவர் பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் மிகச்சிறந்த மனிதர்" என்று அதில் சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 

Read Entire Article