
சென்னை,
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஆண்டுதோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக இத்தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் 979 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. முதல்நிலை தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு ஜனவரி 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (பிப்ரவரி 21) நிறைவு பெறுகிறது.
விருப்பம் உள்ள பட்டதாரிகள் https://upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் பிப்ரவரி 22 முதல் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.