
மும்பை,
மும்பையில் இருந்து டெல்லி நோக்கி ஏர்இந்தியா விமானம் ஒன்று நேற்று காலை 9.57 மணி அளவில் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்ற போது எரிபொருள் பற்றாக்குறையாக இருப்பதை விமானி அறிந்தார். இதனால் ஆபத்தை உணர்ந்த விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரினார். இதற்கு அனுமதி கிடைத்த நிலையில் அந்த விமானம் காலை 11.50 மணி அளவில் ஜோத்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் டெல்லி வந்து விட்டதாக கருதி வெளியேற முயன்றனர். ஆனால் ஜோத்பூர் விமான நிலையம் என அறிந்தவுடன் இதுபற்றி விமான ஊழியர்களிடம் காரணத்தை கேட்டனர். அப்போது தான் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜோத்பூர் விமான நிலையத்தில் விமானம் தரை இறக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.