
கராச்சி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் மோதியது. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 8 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் சுப்மன் கில் படைத்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் விராட் கோலியின் இடத்தை கில் நிரப்ப முயற்சிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்திய அணிக்குள் வந்தது முதல் சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக முயற்சித்து வருகிறார். அவர் அந்த மரபை முன்னோக்கி எடுத்துச் செல்ல முயற்சித்து வருகிறார். இது அவருடைய எட்டாவது சதம். ஆனால் இது அவருடைய மெதுவான சதம். இருப்பினும் அவர் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பேட்டிங் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. இது போன்ற ஆடுகளங்களில் நீங்கள் அழுத்தத்தை உள்வாங்கி போட்டியை கட்டுப்படுத்தி விளையாடுவது அவசியம். அவர் தன்னுடைய இயற்கையான ஆட்டத்துக்கு எதிராக இந்த போட்டியில் விளையாடினார்
அப்படி விளையாடிய அவர் வெற்றியை பெறக்கூடிய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 25 வயதிலேயே அவரைப் போன்றவர் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு நன்றாக விளையாடியது என்னுடைய இதயத்தை கவரும் வகையில் அமைந்தது. அவருக்கு எப்போது அட்டாக் செய்ய வேண்டும் எப்போது அழுத்தத்தை உள்வாங்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கிறது. அவர் பெரிய போட்டிகளில் அசத்த விரும்பக்கூடிய ஒரு வீரர். அந்த வகையில் பொறுப்புடன் விளையாடிய அவர் போட்டியில் முடித்தார். அவர் போட்டியை கட்டுப்பாட்டுடன் எடுத்து சென்று அழகாக விளையாடினார்" என்று கூறினார்.