சென்னை: 2வது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகியஇடங்களிலிருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் தினசரி அல்லது சீசன் டிக்கெட் எடுத்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். சீசன் டிக்கெட்களை 7 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில்தான் அதிக முதல் வகுப்பு சீசன் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், சென்னை ரயில்வே கோட்டத்தில் 160 கிமீ வரை சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பயணிகள் டிக்கெட் பெற யுடிஎஸ் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முதலே யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். 2வது நாளாக இன்றும் ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் மேலும் பாதிப்பு அடைந்துள்ளனர். எக்ஸ்பிரஸ், புறநகர் ரயில் பயணிகள் யுடிஎஸ் செயலி மூலம் பணம் செலுத்திய பின் டிக்கெட் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் மூலமாக பணம் செலுத்திய பின்னரும் சீசன் டிக்கெட் பெற முடியாமல் 2 நாளாக சிக்கல் நீடிக்கிறது. ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக டிக்கெட் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
The post யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் சீசன் டிக்கெட் பெற முடியாமல் 2 நாளாக பயணிகள் பாதிப்பு: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.