யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

3 months ago 8

சென்னை: தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தலைநகரில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில் மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும், கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் நமது திமுக மாணவரணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எனது நன்றிகள்.

பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்.எஸ்.எஸ்.-பாஜவின் செயல்திட்டம் என்பது தெளிவாகியுள்ளது. “யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகள் வெறும் கல்விசார்ந்த நகர்வல்ல, அது தமிழ்நாட்டின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும்” என ராகுல் காந்தி மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.

நீட், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் 3 வேளாண் சட்டங்கள் வரை நமது அரசியலமைப்பினையும் பன்மைத்துவத்தையும் காப்பதற்கான அனைத்துப் போராட்டங்களையும் திமுக முன்னின்று நடத்தியுள்ளது. இன்று தலைநகரில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article