பெங்களூரு: பெங்களூருவில் வரும் 24ம் தேதி நடைபெற இருந்த நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 ஈட்டி எறிதல் போட்டி, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நீரஜ் சோப்ரா 2025 கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டிகள் வரும் 24ம் தேதி நடைபெற இருந்தன. இந்த போட்டியை, ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஜேஎஸ்டபிள்யு ஸ்போர்ட்ஸ், இந்திய தடகள விளையாட்டு சம்மளேனம், உலக தடகள அமைப்பு ஆகியவை கூட்டாக சேர்ந்து நடத்துகின்றன.
இதில், இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கிரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ரியோ ஒலிம்பிக் 2016ல் தங்க பதக்கம் வென்ற ஜெர்மன் வீரர் தாமஸ் ரோஹ்லர், 2015ல் உலக சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் ஜூலியஸ் யேகோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்ததால் பதற்றமான சூழல் உருவானது. இதனால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025 ஈட்டி எறிதல் போட்டிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இப்போட்டிகள் நடக்கும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என அமைப்புக் குழு நிர்வாகிகள் கூறினர்.
The post நீரஜ் சோப்ரா கிளாசிக் 2025: ஈட்டி எறிதல் போட்டிகள் போர் சூழலால் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.