கோஹ்லியை மனம் மாற்ற பிசிசிஐ தீவிர முயற்சி: டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற விருப்பம்

3 hours ago 2

புதுடெல்லி: டெஸ்ட் போட்டிகளில் இருந்து, இந்திய முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோஹ்லி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது முடிவை மாற்றிக் கொள்ளும்படி பிசிசிஐ தரப்பில் வற்புறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. அப்போட்டிகளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோஹ்லி சிறப்பாக ஆடாதது ரசிர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போது, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி விலக உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இருவரும் இந்திய அணியில் தொடர்ந்து ஆடி வந்தனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடந்து வந்த சமயத்தில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா, கடந்த புதன் கிழமை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக விராட் கோஹ்லி, பிசிசிஐயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி, பிசிசிஐ நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. டெஸ்ட் போட்டிகளில், விராட் கோஹ்லி, 123 போட்டிகளில் ஆடி 9,230 ரன்கள் குவித்துள்ளார். 30 சதங்களை விளாசி உள்ளார். வரும் ஜூன் 20 முதல், இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கவுள்ள 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோஹ்லி போன்ற அனுபவம் மிக்க வீரர் இந்திய அணியில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என பிசிசிஐ கருதுவதாக கூறப்படுகிறது.

The post கோஹ்லியை மனம் மாற்ற பிசிசிஐ தீவிர முயற்சி: டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற விருப்பம் appeared first on Dinakaran.

Read Entire Article