யார் பின்புலத்தில் சீமான் செயல்படுகிறார் என்பது விரைவில் வெளிவரும்: நாதகவில் இருந்து வெளியேறிய வெற்றிக்குமரன் பேட்டி

3 months ago 6

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வலதுகரங்களில் ஒருவராக இருந்த வெற்றிக்குமரன், தனசேகரன், மா.புகழேந்தி உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து வெளியேறி தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தை தொடங்கினர். இந்நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சீமானின் மோசமான நிர்வாக திறமையால், ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய நாம் தமிழர் கட்சி இப்போது அதை இழந்து இருக்கிறது.

வெல்லப்போற கட்சித் தலைவருக்கான தகுதி சீமானிடம் இல்லை. எப்போதுமே தான் பேசும் பொருளாக இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் மனநோய் சீமானுக்கு உள்ளது. நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து விட்டு வந்த பிறகு சீமானின் நிலைப்பாடு மாறி உள்ளது. எச்.ராஜாவை பேரறிஞர் என்று கூறி இருக்கிறார், இதன் மூலமாகவே அவர் யாரின் பின்புறத்தில் இயங்கி வருகிறார் என அறிந்து கொள்ளலாம்.

சீமான் யாரின் பின்புலத்தில் செயல்படுகிறார் என விரைவில் ஆதாரப்பூர்வமாக வெளிவரும். 2026 தேர்தலுக்கான திட்டங்கள் எதுவுமே சீமானிடம் இல்லை. நாங்கள் இதுவரை பின்பற்றி வந்த கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே கொள்கையுடன் அதே இலக்குடனான கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என முடிவு எடுத்தோம். இதில் நாங்கள் தேர்ந்தெடுத்தது பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அவரது கரத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இன்று முதல் தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து செயல்படும்.

The post யார் பின்புலத்தில் சீமான் செயல்படுகிறார் என்பது விரைவில் வெளிவரும்: நாதகவில் இருந்து வெளியேறிய வெற்றிக்குமரன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article