திருப்போரூர், ஏப். 3: திருப்போரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில், ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பரிதாபமாக பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராமம், பாலமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(34). சிறுசேரி ஐடி பார்க்கில் டிசைனராக வேலை செய்து வந்தார். இவர் திருப்போரூர் அடுத்த காயார் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மனைவி சுகந்தி(33), மகன்கள் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) ஆகியோருடன் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர், நிகழ்ச்சி முடிந்து இரவு 11 மணியளவில் காயார் கிராமத்தில் இருந்து தையூர் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, எதிரே வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.இந்த விபத்தில் ஹரிதாஸ் மற்றும் அவரது மகன் லியோ டேனியல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விபத்து குறித்து காயார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த சுகந்தி, ஜோ டேனியல் ஆகியோரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் சுகந்தி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஜோ டேனியலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காயார் போலீசார் விபத்தில் சிக்கி இறந்த ஹரிதாஸ், சுகந்தி, லியோ டேனியல் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்ததில், காரை ஓட்டி வந்தவர் காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார்(43) என்பதும், கேளம்பாக்கத்தில் செருப்பு கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும், அன்றைய தினம் வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவு வீட்டிற்கு வரும்போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, காயார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்;ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி: திருப்போரூர் அருகே சோகம் appeared first on Dinakaran.