
கவுகாத்தி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அசாம் மாநிலம் கவுகாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சாம்சன் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சாம்சன் 20 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, ரியான் பராக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதிஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். ரியான் பராக் 28 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிபாதி களமிறங்கினர். 4 பந்துகளை சந்தித்த ரச்சின் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்கள்) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். திரிபாதி 19 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அரைசதம் விளாசினார். மறுமுனையில் ஷிவம் துபே 18 ரன்னிலும், விஜய் சங்கர் 9 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அரைசதம் விளாசிய கேப்டன் ருதுராஜ் 63 ரன்களில் ஆட்டமிழந்தார்.
11 பந்துகளை சந்தித்த டோனி 16 ரன்களில் அவுட் ஆனார். ஆட்டத்தின் முதல் பவர் பிளே ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான பேட்டிங் ஆடியது. அதேபோல், ஆட்டத்தின் 18வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சென்னை அணியால் அடிக்க முடிந்தது.
இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. ஜடேஜா 22 பந்துகளில் 32 ரன்களுடனும், ஓவர்டன் 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர்.
சென்னை அணியின் மோசமான பேட்டிங்கால் தோல்வியடைந்ததாக சமூகவலைதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 2வது முறையாக தோல்வியடைந்துள்ளது.