மேற்கு வங்காளம்: காணாமல் போன சிறுமி சடலமாக கண்டெடுப்பு - காவல் நிலையத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்

3 months ago 23

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜெய்நகர் கிராமத்தில் இன்று அதிகாலை 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. நேற்றைய தினம் அந்த சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளை காணவில்லை என மகிஸ்மரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சிறுமியின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை காப்பாற்றி இருக்கலாம் எனவும், கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவமனை சம்பவத்தைப் போலவே இந்த சம்பவத்திலும் காவல்துறையினர் நடந்து கொண்டனர் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே காவல்துறையினரின் அலட்சியதால் சிறுமியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காவல் நிலையத்திற்கும், அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டதில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைத்தனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில் கிராம மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை போலீசார் மறுத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து, நேற்று இரவு 9 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டதாகவும், இந்த வழக்கு தொடர்பாக இன்று காலை ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள போலீசார், காவல் நிலையத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Read Entire Article