மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: சேர்வலாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

3 hours ago 1

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மாஞ்சோலை வனப்பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலையிலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.

இந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 617 கன அடி வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நீர்வரத்து 1,517 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 800 கன அடியில் இருந்து 400-ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 143 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 111.40 அடியாக உள்ளது.

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 117.05 அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் 4½ அடி உயர்ந்து 121.72 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது. இந்த நிலையில் நீர்வரத்து 1,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் மீண்டும் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது. மணிமுத்தாறு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று 6-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குணடாறு, அடவிநயினார் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

 

Read Entire Article