"அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்.." - டொனால்டு டிரம்ப்

2 hours ago 1

வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் உள்ள கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணியளவில் முறைப்படி டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அவர் பதவியேற்பதற்கு முன்னர் அமெரிக்க பாரம்பரிய முறைப்படி, துணை ஜனாதிபதியாக வான்ஸ் பொறுப்பேற்று கொண்டார்.

அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கின. இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர். டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார். பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம். அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம். செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம்.

பலம் வாய்ந்த, சுதந்திரம் நிறைந்த மற்றும் நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே என்னுடைய நோக்கம். இதற்கு முன்பு எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த நொடி முதல் அமெரிக்காவில் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்க எல்லையையொட்டிய மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக பலர் அமெரிக்காவுக்குள் ஊடுருவி வருகிறார்கள். சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் நிறுத்தப்படும். சட்டவிரோத வகையில் குடியேறிய அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள். மெக்சிகோ வளைகுடா என்பது இனி அமெரிக்க வளைகுடா என்று அழைக்கப்படும்.

ஜோ பைடனால் எல்லை பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. இயற்கை பேரிடர்களை பைடன் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதே இனி கடமையாக இருக்கும். உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது. அமெரிக்க ராணுவம் வலிமை பெற்ற ஒன்றாக கட்டமைக்கப்படும்.

நாங்கள் பனாமா கால்வாயை மீட்டெடுக்க போகிறோம். நோய்களில் இருந்து குழந்தைகளை காப்போம். இனி மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ் பெறப்படும். மக்கள் அவர்கள் விரும்பிய வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும்

பனாமா கால்வாயை மீட்டெடுப்போம். அதை சீனா நிர்வகிக்க தரவில்லை பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அமெரிக்கா வளர்ந்து வரும் நாடாக உள்ளது. அமெரிக்காவின் எல்லைகளை விரிவாக்குவோம். வளங்களை அதிகரிக்கக் கூடிய நாடாக அமெரிக்காவை மாற்றுவோம்.

தைரியத்துடனும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படும் தருணம் இது. உலகிலேயே மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மீட்டெடுக்கப்படும். நம்முடைய மக்கள் உலகில் மிக சிறந்த குடிமக்கள் ஆவர். உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. இதற்கு நானே சான்று" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.

இதனிடையே உலக நலனுக்காக கடவுள் தன்னை காப்பாற்றியதாக துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டொனல்டு டிரம்ப் தனது உரையின்போது தெரிவித்தார்.

Read Entire Article