மேம்பாலத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தறுத்து பெண் காவலர் படுகாயம்

2 weeks ago 3

மாதவரம்: சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி மாஞ்சாநூலை பயன்படுத்தி காற்றாடி விட்டவர்களை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் மாஞ்சாநூலில் பட்டம் விடுவது குறைந்தது. இந்நிலையில், மீண்டும் மாஞ்சா நூலில் பட்டம் விடுவது தொடங்கியுள்ளது. சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரம்யா (25). இவர், அமைந்தகரை காவல் நிலையத்தில் காவலராக உள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை இவர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் இருந்து அமைந்தகரை காவல் நிலையத்துக்கு மொபட்டில் புறப்பட்டார். அமைந்தகரை ஸ்கைஒன் மேம்பாலம் மீது சென்றபோது பறந்துவந்த மாஞ்சா நூல் ஒன்று ரம்யாவின் கழுத்தில் சிக்கி அறுத்ததில் அவர் படுகாயமடைந்தார். ரத்தவெள்ளத்தில் விழுந்த அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு திரும்பினார்.

இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, மாஞ்சா நூலில் காற்றாடி விட்டதாக அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு அவர்களை கடுமையாக எச்சரித்துவிட்டு கடிதம் எழுதிவாங்கிவிட்டு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து சமூக ஆர்வர்கள் கூறுகையில், சென்னையில் சமீபகாலமாக மாஞ்சா நூலில் காற்றாடி விடப்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அமைந்தகரை போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளோம். அமைந்தகரை பகுதியில் மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்டதால் பெண் காவலர் பாதிக்கப்பட்டுள்ளார். இனிமேலாவது அமைந்தகரை சுற்று வட்டார பகுதியில் மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிடுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post மேம்பாலத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தறுத்து பெண் காவலர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article