டெல்லி :புதிய UGC வரைவு விதிகளை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கு. அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.யின் நோக்கம்.
அரசியலமைப்பை சிதைக்க முயற்சிக்கிறது மோடி அரசு.கல்வி நிலையங்களை ஆர்எஸ்எஸ் மையமாக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. ஒரே நாடு, ஒரே மொழியை கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. பல மொழிகள் ஒன்றிணைந்ததுதான் நம் இந்திய தேசம்.. அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “இந்த போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆனது. மாநில உரிமைகளை பறிப்பதில் ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. புதிய கல்விகொள்கையை நாங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் திமுக உடன் சமாஜ்வாதி கட்சி ஆதரவாக இருக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அனைத்து மாநிலங்களின் மொழி, கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்: திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பங்கேற்பு!! appeared first on Dinakaran.